Articles by "இந்தியா"
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


நிபா வைரஸ் எப்படிப் பரவுகிறது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி?

2018, 2021 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  அவர்களுடன் தொடர்பில் இருந்த 160 பேர் தனிமையில் வைக்கப்பட்டுளள்னர்.

இந்த நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன?

நிபா வைரஸ் - வரலாறு

1998-99-ம் ஆண்டுகளில், மலேசியாவில் மக்கள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, அதற்குக் காரணம் பன்றிகள் என்பதைக் கண்டறிந்து, சுமார் 10 லட்சம் பன்றிகளை அழித்தார்கள்.

 ‘கும்பங் சங்கை நிபா’ (KUMPUNG SUNGAI NIPAH) என்ற இடத்தில் உள்ள பன்றி வளர்ப்பவர்களை முதலில் இது பாதித்ததால், ‘நிபா வைரஸ்’ என்றும் ‘நிபா காய்ச்சல்’ என்றும் பெயர் வந்தது. அப்போது, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 257 பேரில், 105 பேர் இறந்துபோனார்கள். அதன்பிறகு, சிங்கப்பூருக்கும் இந்த நோய் பரவி, 11 பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் இறந்துபோனார்.

முதலில் இதை வேறொரு வைரஸால் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் (Japanese encephalitis) எனத் தவறாகக் கருதிய அரசாங்கம், பன்றிகளைக் கொன்றதுடன், இதற்குக் காரணமாக கியூலெக்ஸ் (Culex) வகை கொசுக்களையும் கட்டுப்படுத்தியது. ஆனால்,

இவ்வகை மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி (JE-V) போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்த மூளைக்காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோதுதான், இதை நிபா என்ற வைரஸ் ஏற்படுத்தியதும், இதை பன்றிகள் பரப்பியது, அவை நோயினால் நலிவடைந்ததும் தெரிய வந்தது.

அதுசரி, பன்றிகளுக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது. வௌவால்களிடம் இருந்துதான்! இதுவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பழம் தின்னும் வௌவால்கள் (Pteropus vampyrus, Pteropus hypomelanus) உடலில் இந்த வைரஸ்கள் (Primary reservoir for Nipah virus) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வைரஸ் இருபது வருடங்களுக்கு முன்று கண்டறியப்பட்டாலும், இவை 1947-ம் ஆண்டுகளிலேயே தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்தத் தொற்று ஏற்பட்டு 24 பேர் பாதிக்கப்பட்டு அதில் 17 பேர் இறந்துள்ளனர். 

இதையும் படிக்க | கோழிக்கோட்டில் 4 பேருக்கு நிபா: ஊரடங்கு பிறப்பிப்பு!

2001-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு, சிலிகுரி மற்றும் நொய்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளானது வங்கதேசம்தான். 2018-ல் கேரள மாநிலத்தின் வட பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆக, இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய (Zoonotic disease) நோயாகும்.

எப்படியெல்லாம் நிபா ஏற்படலாம்?

* இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் என எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். அல்லது, அவை கடித்த/சுவைத்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

* வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு - மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம்.

* காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம்.

இப்படி பல்வேறு வழிகளிலும் நேரடியாகவோ அல்லது பிற விலங்குகள் மூலமாகவோ, மனிதர்கள் மூலமாகவோ பரவ பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

இந்த வைரஸ் ஹெனிபா வைரஸ் (Henipa virus) என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இது பாராமிக்ஸோ விரிடியே (Paramyxo viridea) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை நிவ் (NIV) என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ஒழுங்கற்ற தன்மையைக் கொண்டது. சுமார், 40 முதல் 60 நானோமீட்டர் அளவு உள்ளது. இது ஒரு ஆர்என்ஏ வைரஸாகும்.

இதைச் சுற்றி கொழுப்பால் ஆன ஒரு சவ்வு இருக்கும். அதன் உட்பகுதியில் புரதக்கூறுகளால் ஆன ஒரு ஓடும் அமைந்திருக்கும். உட்பகுதியில் வளைந்த வடிவிலான ஒரு ஆர்என்ஏ இருக்கும். அந்த ஆர்என்ஏவுடன் நியூக்ளியோகாஸ்பிட் என்ற ‘என்’ புரதமும், எல் மற்றும் பி புரதமும் இணைந்திருக்கும். இந்தப் புரதங்கள்தான், ஆர்என்ஏ பெருகுவதற்கான ஆர்என்ஏ பாலிமரேஸ் நொதியின் பணிகளைச் செய்கின்றன.

கொழுப்புச்சவ்வில், F என்ற கம்பி போன்ற நீட்சிகளும், G போன்ற அமைப்பும் இருக்கும். இவை புரதப் பொருள்களால் ஆனவை. இவை, மனித உடலில் வைரஸ் கிருமி ஒட்டிக்கொள்ள உதவுகின்றன. இந்த ஆர்என்ஏவில் 6 ஜீன்கள் இருக்கும்.

தொற்று ஏற்பட்ட எவ்வளவு நாளில் நோய் அறிகுறிகள் தென்படும்?

இந்த வைரஸ், மனித உடலுக்குள் நுழைந்த 4 அல்லது 14 நாட்களுக்குள் பெருகி நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். அறிகுறிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு இருக்கலாம். இவை அடுத்த இரண்டு வாரங்கள் வரை நீண்டு செல்லவும் வாய்ப்பு உண்டு. 
நோய் அறிகுறிகள் என்னென்ன?

பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை தடுமாறும். மனதில் குழப்பம் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம்.

பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே சம்பவித்துவிடும்.
பரிசோதனைகள்
இந்த வைஸ் தொற்றைக் கண்டறிய, எலிஸா பரிசோதனைகள் உள்ளன.

இதன்மூலம், இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கொண்டு, இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். மேலும், பிசிஆர் பரிசோதனை மூலமும் இதனை உறுதி செய்யலாம். இப் பரிசோதனையை புணேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே செய்ய இயலும். 
இந்தப் பரிசோதனைக்கு ரத்தம், சிறுநீர், முதுகிலிருந்து பெறப்படும் தண்டுவட நீர், சளி, உமிழ்நீர், தொண்டை மற்றும் நாசிப்பகுதி நீர் ஆகியவை பயன்படுத்தப்படும்.

சிலருக்கு, பொதுவான பரிசோதனைகளுடன் சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, சுவாசப் பரிசோதனை, நரம்பு மண்டலப் பரிசோதனைகளும் தேவைப்படலாம்.

மருத்துவச் சிகிச்சை - மருந்துகள் இல்லை

நிபா வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் பிரத்தியேகமான வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு தற்சமயம், ரிபாவிரின் (Ribavirin) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது.

தடுப்பூசிகள் இல்லை
இந்த நிபா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுத்துக்கொள்ளலாமா என்றால், அதற்கான தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வரும்முன் காப்பதுதான் சிறந்தது என்று மக்கள்தான் தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஆனாலும், வாய்ப்பு உள்ளது; ஆறுதலும் உள்ளது…

இந்த வைரஸை ஒத்த ஹென்ரா (Hendra virus) வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே (HENV-) நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதங்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தத் தடுப்பூசி குதிரைகளிடம் சோதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எப்படித்தான் சிகிச்சை செய்வது?

இந்த வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளும், தடுப்பூசிகளும் இல்லாதநிலையில், இந்தக் காய்ச்சல் கண்டவரை அல்லது நிபா வந்தவரென சந்தேகப்படுபவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் இதற்கென உள்ள பிரத்தியேக வார்டுகளில் உள்நோயாளியாகச் சேர்த்து, அவரை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அங்கு அவருக்கு இரண்டுவிதமான சிகிச்சை அளிக்கப்படும்.

2. தொற்றால், சுவாசம் - மூளை - நரம்பு மண்டலப் பாதிப்புகளில் இருந்து (supportive care treatment) விடுபட, செயற்கை சுவாசம், அவரது இதயத் துடிப்பு (நாடித் துடிப்பு), ரத்த அழுத்தம் ஆகியவை சீராக இருக்கவும், தேவையான ஆக்ஸிஜனை மூளையும், நரம்பு மண்டலமும் பெறவும் சிகிச்சை அளிக்கப்படும்.

தேவையான சத்துகள், குளுக்கோஸ் ஆகியவையும் சிரை மூலமாக அவருக்குச் செலுத்தப்படும். தொடர்ந்து, சுவாசம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை - நரம்பு மண்டல தேவைகளுக்கு ஏற்பட தொடர் கண்காணிப்பு சிகிச்சை தரப்படும்.

வௌவால்கள் பாதிக்கப்படுமா?

இந்த நிபா வைரஸை உடலில் கொண்டிருக்கும் வௌவால்கள் நோய்வாய்ப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், பன்றிகள் மற்றும் பிற விலங்குகள் இந்த நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. பன்றிகளுக்குக் கடுமையான இருமல், மூச்சுத்திணறல், தசைப்பிடிப்பு, தடைத்துடிப்பு, நடக்கத் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் இருக்கும். பன்றி வளர்ப்புப் பண்ணையில் உள்ளவர்கள், பன்றிகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அது நிபாவாக இருக்குமோ என சந்தேகிக்க வேண்டும். இதன்மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பிற பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

நோய் பரவாமல் தடுப்பது எப்படி?

முதலில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப்போடுங்கள்.
சிலர் வௌவால்களையே சாப்பிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வௌவால்களிடம் இந்த நிபா வைரஸ் மட்டுமின்றி, கொஞ்ச காலத்துக்கு முன்பு நம்மைப் பயமுறுத்திய எபோலா, சார்ஸ் தொடங்கி ரேபீஸ் வெறிநாய்க்கடி வைரஸ் வரை சுமார் 60 வகை வைரஸ் வகைகளைச் சுமந்து திரிகிறது.

எனவே, வௌவால் கடித்தாலும் ஆபத்துதான். அதன் உமிழ் நீர், பிற உடல் நீரினாலும் மனிதர்களுக்குப் பல்வேறு வைரஸ் தொற்று ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை.
விலங்கு நல மருத்துவர்களும், வனவிலங்குகளைக் கையாள்பவர்கள், ஆராய்ச்சியாகள், வனப் பாதுகாப்புத் துறையினர், சுற்றுலா செல்பவர்கள் என அனைவருமே சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அடுத்து, நோய்த்தொற்று ஏற்பட்டவர்களோடு இருப்பவர்கள், முகக் கவசம், கையுறை, உடல் பாதுகாப்பு உடைகளை அணிந்தே அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தொற்று ஏற்பட்டவரின் பழைய உடைகளை எரித்துவிட வேண்டும். இவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மருந்தோ, தடுப்பூசியோ இல்லாத காரணத்தால், சுய பாதுகாப்பு முறைதான் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

பொதுமக்கள், வீட்டு விலங்குகள் மற்றும் பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளிடம் மாற்றம் தெரிந்தால், உடனடியாக விலங்கு நல மருத்துவரிடம் காண்பித்து நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். தொற்று ஏற்பட்ட விலங்குகள் பன்றியாகவோ, குதிரையாகவோ, எதுவாக இருந்தாலும், அவற்றை அழிப்பதன் மூலம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
நோயுற்ற இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்ணக் கூடாது.

சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவ்வளவுதான்.
தரையில் விழுந்துகிடக்கும் பல் பட்ட, கடிக்கப்பட்ட, குதறிய, ஓட்டை விழுந்த, கெட்டுப்போன பழங்களை எடுத்து, அணில் கடித்தது, இனிப்பாக இருக்கும் என்று நினைத்து கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
எந்தக் காய்ச்சல் என்றாலும் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சல் கண்டவரை, அரசு மருத்துவமனையில் வைத்து அதற்கான வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

வீடு அருகே எலியோ பூனையோ எந்த விலங்கோ இறந்தாலும், உடனடியான வனத் துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கள், பதநீர் என திறந்த நிலையில் தயாரிக்கப்படும் பானங்கள், எந்தப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று தெரியாமல் தயாரிக்கப்படும் பழச் சாறுகளையும் தவிர்க்க வேண்டும்.

மருத்துவத் துறையில் இருப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவராகட்டும், செவிலியராகட்டும், ஆய்வுக்கூட பரிசோதகராகட்டும், மருத்துவமனை ஊழியராகட்டும், அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற தொற்றுநோய்க் கிருமி பாதிப்பு திடீரென ஏற்படும்போது, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனை கேட்கப்பட்டு, தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் மேற்பார்வையில் ஆய்வு நடத்தி, குறிப்பிட்ட மாநில சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து சிகிச்சைகள் மட்டுமல்லாது, பாதுகாப்பு - தற்காப்பு - தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.


 அதானி குழுமத்தின் மீது மேலும் ஒரு மோசடி குற்றச்சாட்டு

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓசிசிஆா்பி என்ற அமைப்பு அதானி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதானி குழுமமானது பங்குச் சந்தையில் தனது நிறுவனங்களுடைய பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், திட்டமிடப்பட்ட குற்றங்கள்-ஊழல் தடுப்புத் திட்டம் (ஓசிசிஆா்பி) என்ற அமைப்பு அதானி குழுமத்தின் மீது புதிய மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வரிவிதிப்பு குறைவாக உள்ள நாடான மோரீஷஸில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக அதானி நிறுவனங்களில் சிலா் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொழிலதிபா் கௌதம் அதானிக்கு நெருக்கமானவா்களே இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், அதானி குழுமத்தின் மின்னஞ்சல் தகவல்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த மோசடி கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதானி குடும்பத்தினருடன் நீண்ட காலமாகத் தொடா்பில் இருந்து வரும் நாசா் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகியோா் அதானி பங்குகளை அதிக அளவில் வாங்கி, அவற்றை மோரீஷஸ் நாட்டில் முறைகேடாக விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அதானி குழுமத்துக்குப் பெருமளவில் வருவாய் கிடைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம் மறுப்பு: நிதி மோசடி தொடா்பான புதிய குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது தொடா்பாக அக்குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மைகள் ஏதுமற்ற ஹிண்டன்பா்க் அறிக்கையைப் போலவே, இந்த அறிக்கையிலும் அதானி குழுமத்தின் மீது வெளிநாட்டு சக்திகள் போலியான குற்றச்சாட்டுகளைப் புனைந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) முடித்துவைத்த வழக்குகளின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் செயல்பாடுகளில் எந்தவித சந்தேகமும் இல்லை என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையை மதித்து நடக்க வேண்டியது அவசியம். நீதித் துறையின் மீது அதானி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகளைக் குறைத்து, மற்ற நிறுவனங்களின் மதிப்பை உயா்த்தும் நோக்கிலேயே இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்கு மதிப்புகள் சரிவு: அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை எதிரொலித்தன. அக்குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களின் மதிப்புகள் சரிவு கண்டன.

ஹிண்டன்பா்க் தெரிவித்த புகாா் காரணமாக அதானி குழுமம் சுமாா் 15,000 கோடி அமெரிக்க டாலரை பங்குச் சந்தையில் இழந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரஅபராதம்: மத்திய அரசு

நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை அறிவித்துள்ளது.
சிம்-காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.

அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிம்-காா்டு விற்பனையை ஒழுங்கப்படுத்த திட்டமிட்டு மத்திய அரசு வகுத்த புதிய விதிகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, தங்களின் அனைத்து சிம்-காா்டு விற்பனை நிலையங்களையும் வருகிற செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு முன் அரசிடம் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், விதிகளை மீறியதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் நடைபெற்ற அனைத்து சிம்-காா்டு இணைப்புகளையும் புதிய விதிமுறைகளின்படி மீண்டும் சரிபாா்க்க வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நகர பேருந்து இயக்கத்தை அதிகரிக்க “பிரதமரின்-மின்சார பேருந்து சேவை”-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 10,000 மின்சாரப் பேருந்துகள் மூலம் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை மேம்படுத்தும் "பிரதமரின்-மின்சார பேருந்து சேவை" என்ற பேருந்துத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ரூ.57,613 கோடி செலவாகும். இதில் ரூ.20,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பேருந்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

இதையும் படிக்க :இந்திய ரயில்வேயில் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான புதிய திட்டம்!

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை இத்திட்டம் உள்ளடக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கம்:

நகரப் பேருந்து சேவையில் சுமார் 10,000 பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்

இந்தத் திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

பிரிவு ஏ-நகரப் பேருந்து சேவைகளை அதிகரித்தல்: (169 நகரங்கள்)

அங்கீகரிக்கப்பட்ட பேருந்து திட்டம் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மாதிரியில் 10,000 மின்சார பேருந்துகளுடன் நகரப் பேருந்து நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

தொடர்புடைய உள்கட்டமைப்பு பேருந்து பணிமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும்; மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்கட்டமைப்பை (துணை மின் நிலையம் போன்றவை) உருவாக்கும்.

பிரிவு பி-பசுமை நகர்ப்புற இயக்கம் முன்முயற்சிகள்: (181 நகரங்கள்)

பேருந்துக்கான முன்னுரிமை, உள்கட்டமைப்பு, பன்முனை வசதிகள், மின்னேற்றி நிலையங்கள் உள்கட்டமைப்பு போன்ற பசுமை முன்முயற்சிகளை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்திய ரயில்வேயில் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இந்திய ரயில்வேயில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டங்களால் போக்குவரத்து எளிதாவதுடன் நெரிசல் குறையும், இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டினை இத்திட்டங்கள் வழங்கும்.

உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் என 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்களால் இந்திய ரயில்வேயில் தற்போதுள்ள ரயில் பாதை கட்டமைப்பில் 2339 கி.மீ. தூரத்தை அதிகரிக்கும்.

இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு 7.06 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பையும் வழங்கும்.


 பிரதமரின் விஸ்வகர்மா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலார்களை ஆதரிக்கும் திட்டமாகும்

இத்திட்டத்திற்கு ரூ. 13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; முதலில் 18 பாரம்பரிய தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க :பிரதமரின்-மின்சார பேருந்து சேவை”-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை!

கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் பாரம்பரிய திறன்களின் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதும், வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும்.

இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும்.

 முதலில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்கள் முதலில் இடம்பெறும்.

(i) தச்சர் (சுதார்) 

(ii) படகு தயாரிப்பாளர்

(iii) கவசம் தயாரிப்பவர்

(iv) கொல்லர் (லோஹர்)

(v) சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்

(vi) பூட்டு தயாரிப்பவர்

(vii) பொற்கொல்லர் (சோனார்)

(viii) குயவர் (கும்ஹார்)

(9) சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்

(x) காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்

(xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி)

(xii) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்

(xiii) பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்)

 (xiv) முடி திருத்தும் தொழிலாளர்(நயி)

(xv) பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்)

(xvi) சலவைத் தொழிலாளி (டோபி)

(xvii) தையல்காரர் (டார்ஸி); மற்றும்

(xviii) மீன்பிடி வலை தயாரிப்பவர்.


 நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3: இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தம்

சென்னை: நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டா் அணுக்கப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் புதன்கிழமை (ஆக.16) முன்னெடுக்கவுள்ளனா்.

வெற்றிகரமாக அது செயல்படுத்தப்பட்ட பிறகு அடுத்த 7 நாள்களில் நிலவில் லேண்டா் கலன் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாக குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி தற்போது குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் நெருக்கமான பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. அதற்கு அடுத்தகட்டமாக நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான தூரத்தை 100 கி.மீ. ஆக குறைக்கும் பணிகள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.

அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் அது தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தில்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


 இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்படும். தில்லி செங்கோட்டையில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரை பிரதமராக அவர் கொடுக்கும் கடைசி உரையாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும்.

இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் மாபெரும் அளவில் பாஜக வீழ்த்தப்படும். பிரதமர் ஆசை எனக்கு இல்லை. பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.

பாஜக ரஃபேல் போன்ற விஷயங்களில் ஊழலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நாங்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளது என்றார்.


 உத்தரகண்டில் கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். 

உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் யாத்திரை பாதையில் கௌரிகுண்ட் அருகே நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

பாதிக்கப்பட்டவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற குழுக்களும் சம்பவ இடத்தில் இருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறினார். 

ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் சௌரப் கஹர்வார் கூறுகையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார். மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் புஷ்கர் தாமி நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார். 

மேலும், வெள்ள அபாயம் உள்ள இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றுமாறும் அவர் உத்தரவிட்டார். இதனிடையே கேதார்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 


 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. மத்திய அரசுக்கு எதிராக இந்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க :உத்தரகண்ட் நிலச்சரிவில் 4 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் காணவில்லை

இந்நிலையில் கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அமித் மகாஜன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. 

கூட்டணிக்கு  'இந்தியா' என்ற பெயரை வைத்துள்ளது, அப்பாவி மக்களின் அனுதாபத்தையும் வாக்குகளையும் பெறுவதற்கும் அரசியல் ஆதாயத்திற்கான கருவியாக பயன்படுத்துவதற்குமே என்பதால் இதனைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கூறியது. 

இந்த வழக்கில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி விளக்கமளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது. 

வந்தே பாரத் ரயில்கள் மீது பல்வேறு கல்வீச்சு தாக்குதலால் ரயில்வே துறைக்கு ரூ. 55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 50 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கல் மீது அவ்வப்போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்துவதால் ரயிலின் கதவுகளும், ஜன்னல்களும் சேதமடைகின்றன.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதில்:

வந்தே பாரத் ரயில்கள் மீது கடந்த 2019 முதல் 2023 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்டு கல்வீச்சு சம்பவத்தால் ரயில்வேவுக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 151 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் எந்தவொரு பயணிகளும் காயமடையவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.